நாடு முழுதும் உள்ள மாநிலங்களின் கவர்னர் மாளிகை அருகே அதானி குழுமத்திற்கு மத்திய பாஜக அரசு துணை போவதாக கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது கே.எஸ் அழகிரி பேசியதாவது, நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கை என்பது நேருவால் கொண்டுவரப்பட்ட கலப்பு பொருளாதாரம் ஆகும்.

இது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. ஆனால் தற்போது பாஜக அரசு அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு மட்டும் தான் துணை போகிறது. நாட்டின் ஜனநாயகத்தை வெளிநாட்டில் ராகுல் காந்தி கொச்சைப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார். மோடி தான் காங்கிரஸ் இல்லாத தேசம் அமைப்போம் என்று கூறி வருகிறார். ஆனால் நேரு பல கட்சி முறையை ஆதரித்தவர். எனவே ஜனநாயகத்தின் தொட்டில் காங்கிரஸ் கட்சி தான். பாரம்பரியமிக்க ஜனநாயகம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அந்த பாரம்பரியத்திற்கு காரணமே காங்கிரஸ் கட்சி தான் என்று கூறினார்.