மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கோலார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் இந்த பயங்கரம் அரங்கேறியுள்ளது.

ரீவா மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் என்ற பிரபல ரவுடி (History Sheeter), தனது வருங்கால மனைவியான ஒரு பல் மருத்துவரைச் சந்திக்க போபாலுக்கு வந்துள்ளார். வரும் பிப்ரவரி 6-ம் தேதி இவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், குல்தீப்பின் காரை வழிமறித்து அவரை வெளியே இழுத்துப் போட்டுத் தாக்கினர். இரும்பு கம்பிகள் மற்றும் சுத்தியலால் அவரது கை மற்றும் கால்களை குறிவைத்துச் சிதைத்தனர்.

அங்கிருந்த ஒரு இளம்பெண் அவர்களைத் தடுக்க முயன்றும் ரவுடிகள் அதைக் கேட்கவில்லை. சுற்றியிருந்த மக்கள் யாரும் அவரைக் காப்பாற்ற முன்வராமல், தங்களின் மொபைல் போன்களில் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

படுகாயமடைந்த குல்தீப் தற்போது ஐசியூவில் உயிருக்குப் போராடி வருகிறார். பழைய முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.