காஸியாபாத்தில் வீடியோ கால் மூலமாக நிர்வாணக் காட்சிகளை அரங்கேற்றி, பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து வந்த பெரும் கும்பலை காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. இந்தச் சோதனையில் ஒரு பெண் உட்பட மொத்தம் 7 பேர் பிடிபட்டனர்.

சமூக வலைதளங்கள் வாயிலாக ஆண்களைத் தொடர்பு கொள்ளும் இந்த கும்பல், இளம் பெண்களைக் கொண்டு வீடியோ காலில் ஆபாசமாகப் பேசவும், உடல் உறுப்புகளைக் காட்டவும் செய்துள்ளனர். இதற்காக அந்த பெண்களுக்கு மாதம் 20,000 முதல் 25,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு ஆபாசமாகப் பேசும் நபர்களை ரகசியமாகத் திரைப்பதிவு செய்யும் இந்தக் கும்பல், பின்னர் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் செல் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி இந்த மோசடி வலையமைப்பைக் கண்டறிந்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய மிரட்டல்களுக்குப் பயந்து பொதுமக்கள் யாரும் பணத்தைத் தர வேண்டாம் என்றும், உடனடியாகக் காவல்துறையை அணுகுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.