காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்து, அவரது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசியதுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் சித்துவைத் தலைமை வேட்பாளராக அறிவித்தால், அவர் மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புவார். அரசியல் கட்சிகளுக்குக் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து முதல்வர் பதவியை வாங்க, எங்களிடம் ரூ.500 கோடி இல்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
“எங்களிடம் யாரும் பணம் கேட்கவில்லை, ஆனால் ஒரு நபர் ரூ.500 கோடி இருந்த சூட்கேஸ் கொடுத்து முதல்வர் ஆகியுள்ளார். அதே நேரம், சித்துவிடம் அதிகாரம் கொடுத்தால், அவரால் பஞ்சாப்பைத் தங்க மாநிலமாக மாற்ற முடியும்” என்று நவ்ஜோத் கௌர் கூறினார்.
காங்கிரஸுக்குள் ஏற்கெனவே உட்கட்சிப் பூசல் இருப்பதாகவும், சித்துவை முன்னுக்கு வரவிடாமல் தடுப்பதற்குக் காங்கிரஸில் 5 முதல்வர் வேட்பாளர்கள் இருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
