நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்களை 2026-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கு முடிவு செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண்‌ ரிஜஜு போக்ஸோ வழக்குகள் குறித்து விரிவாக பேசிய நிலையில், தமிழ்நாட்டில் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்கள் மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது என்று கூறினார்.

இதனையடுத்து விழுப்புரம் எம்பி ரவிக்குமார் பேசுகையில், அமைச்சர் அளித்த புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தை விட சிறிய மாநிலங்களான கேரளாவில் 52 விரைவு நீதிமன்றங்களும், தெலுங்கானாவில் 24 விரைவு நீதிமன்றங்களும் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 14 விரைவு நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாதம் வரை‌ 5127 போக்சோ வழக்குகள் தமிழ்நாட்டில் நிலுவையில் இருக்கிறது. எனவே விரைவு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிடப்பில் போடப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.