நடிகர் ரவி மோகன் தற்போது ‘பராசக்தி’ மற்றும் ‘கராத்தே பாபு’ என்ற இரு படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்புக்குத் தொடர்ந்து கிடைக்கும் ஆதரவையும், ரசிகர்களின் அன்பையும் தொடர்ந்து வலிமையாக்கும் வகையில், அவர் தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரவிமோகன் ஸ்டூடியோஸ்’-ஐ நேற்று மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழா திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் கலைவிழாவாக மாறியது.

விழாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன், பிற மொழித் திரைப்படங்களின் பிரபலங்களும் பங்கேற்றது சிறப்பு. குறிப்பாக, கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, மணிகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீனாத், மோகன் ராஜா, அதர்வா மற்றும் பலர் கலந்து கொண்டு ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதே விழாவில், ‘ரவிமோகன் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கும் முதல் இரண்டு படங்களின் பூஜை நிகழ்வும் நடைப்பெற்றது.

விழாவில் உரையாற்றிய ரவி மோகன், “என் மீது சமீபத்தில் எழுந்த எதிர்மறையான விமர்சனங்கள், சொத்து முடக்கங்கள் ஆகியவை என்னை பாதிக்கவில்லை. என்னுடைய சொத்து பணம் இல்ல, என் சொத்து நீங்கள்தான், குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள். என்னை வளர வேண்டாம் என்று நினைக்கும் சிலருக்கு என் பதில் இதுதான், இங்கதான் இருப்பேன், வளர்ந்துட்டே இருப்பேன்!” என உணர்வுபூர்வமாக தெரிவித்தார். அவரது இந்த உற்சாகமான பேச்சு ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.