நாகர்கோவில் வடசேரி வாத்தியார்விளை பகுதியில் வசிக்கும் லாரி டிரைவரான மிருதுளா குமாரின் மகள் ஆரதி (23) என்ற பி.காம் பட்டதாரிக்கு வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, உறவினர்களிடம் கொடுக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வந்தன. சம்பவத்தன்று பெற்றோர் அழைப்பிதழ் கொடுக்க வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஆரதி, மாயமானார். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர் மகள் காணாமல் போனதோடு, வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.30,000 பணமும் காணாமல் போனது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மிருதுளா குமார் வடசேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரதியின் இருப்பிடம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இரு நாள்களுக்கு பிறகு ஆரதி தன் பெற்றோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் தஞ்சாவூரில் இருப்பதாகவும், தன்னை அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.
உடனே பெற்றோர் இந்த தகவலை போலீசாருக்கு தெரிவித்து, தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆரதியை மீட்டு அழைத்து வந்த பிறகு, அவர் ஏன் இவ்வாறு வீட்டை விட்டு புறப்பட்டார், என்ன காரணம்? என்பது குறித்து தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
