திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகத்திற்கு இப்போது  மத நல்லிணக்கம் பற்றிய உரையாடல் தேவைப்படுகிறது, விவாதம் தேவைப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் நெடுங்காலமாக இந்த நல்லிணக்கம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அந்த அளவிற்கு இந்த மண்ணில் முதிர்ச்சியும், பக்குவமும் நிறைந்த தலைவர்கள் நம்மை வழிநடத்தி இருக்கிறார். பாபர் மசூதி இடிக்க படும் போது கூட தமிழ்நாடு அமைதியாக இருந்தது. எங்கும் வன்முறை வெடிக்கவில்லை. இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இன்னும் பிற மதங்களைச் சார்ந்தவர்களும்  சகோதரர்களாய் நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய ஒரு மாநிலமாக தமிழ்நாடு வழங்குகிறது.

பிற மாநிலங்களோடு ஒப்பிடுகிறபோது தமிழ்நாடு அமைதி பூங்காவாக…  மத நல்லிணக்க மண்ணாக விளங்குகிறது. ஆனால் இப்போது நமக்கு கவலை மேலிடுகிறது. அச்சம் உருவாகி இருக்கிறது. அதனால் தான் திராவிட நட்பு கழகத்தின் சார்பில் அண்ணன் சுபவி அவர்களும், தோழர் சிங்கராயர் அவர்களும் பெரு முயற்சி எடுத்து வேலூர் மண்ணில் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த மத நல்லிணக்க மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.

இந்த நல்லிணக்கத்தை சிதைத்து விடுவார்களோ என்கிற அச்சம்,  வன்முறைகளை தூண்டிவிட்டு – இந்த நாட்டையும் தமிழ்நாட்டையும் மதவெறி வேட்டைகாடாக மாற்றி விடுவார்களோ என்கிற அச்சம். ஆகவே தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

இந்து மதத்தின் சார்பிலும் இங்கே நம்முடைய சைவ மடாதிபதிகள் வந்திருக்கிறார்கள், பௌத்த மதத்தின் சார்பிலும் வந்திருக்கிறார்கள், சீக்கிய மதத்தின் சார்பிலும் வந்திருக்கிறார்கள், இஸ்லாம் – கிறிஸ்தவம் சார்பிலும் இங்கே பெரியோர் பலர் வந்து இங்கே உரையாற்றியிருக்கிறார்கள்.

ஒரே மேடையில் எல்லா மதங்களைச் சார்ந்தவர்களும் அமர வைக்க வேண்டும். அதன் மூலம் மக்கள் ஒரு நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்கிற அந்த உயர்ந்த எண்ணத்தை வரவேற்கிறோம்,  பாராட்டுகிறோம். என்ன அச்சம் ? இங்கே சங்பரிவார்களின் கொட்டம் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது. அவர்கள் இன்னும் அமைப்பு ரீதியாக வலிமை பெறவில்லை. ஆனாலும், அவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் சர்ச்சையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார் என தெரிவித்தார்.