கோவை மாநகரில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வரும் வணிக எரிவாயு உருளைகளின் கடும் தட்டுப்பாடு காரணமாக வீதியோரக் கடைகள் மற்றும் சிறு உணவகங்கள் பெருமளவில் மூடப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக எரிவாயு உருளையின் விலை தற்போது 115 ரூபாய் உயர்ந்து 2043 ரூபாய் 50 காசாக அதிகரித்துள்ளது.
இந்தத் திடீர் விலை உயர்வால் பெரிய உணவகங்கள் மட்டுமின்றி அன்றாட வருமானத்தை நம்பித் தொழில் நடத்தும் சிறு வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு உருளைகளின் தட்டுப்பாட்டைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில இடைத்தரகர்கள் அவற்றின் விலையை மும்மடங்கிற்கும் மேலாக உயர்த்தி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாகச் சந்தையில் தட்டுப்பாட்டைக் காரணம்காட்டி ஒரு எரிவாயு உருளையை 50,200 ரூபாய் முதல் 50,500 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய முறைகேடான விற்பனையால் கோவை மாநகரில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தெருவோரக் கடைகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன.
கூடுதல் விலைக்கு எரிவாயு உருளைகளை வாங்கித் தொழில் நடத்த முடியாத நிலையில் பல உணவக உரிமையாளர்கள் தங்களது கடைகளைத் தற்காலிகமாக மூடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த எரிவாயு உருளைத் தட்டுப்பாட்டைச் சீர்செய்ய வேண்டும் என்றும் முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
