சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் திடீரென பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பூங்கா அதிரடியாக மூடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பூங்காவில் கரண்டிவாயன், கூழைக்கடா மற்றும் செங்கால் நாரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பரிசோதனை முடிவுகளில் பறவை காய்ச்சல் (H5N1) உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பூங்காவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பூங்கா வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் பூங்காவுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
