பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி பங்கேற்காதது குறித்து, அந்த நாட்டின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் வீரர்களைச் சந்தித்தபோது, உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்த முடிவு முழுமையாக அரசின் முடிவு என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ள அவர், நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் கண்ணியத்தைக் காக்க வங்கதேச கிரிக்கெட் வாரியமும் லிட்டன் தாஸ் தலைமையிலான வீரர்களுமே உலகக் கோப்பை கனவைத் தியாகம் செய்து தாங்களாகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.

இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி அளித்த போதிலும், போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.

இதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக போட்டியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணி அழைக்கப்பட்டது. தற்போது ஐசிசி வங்கதேசத்தின் மீது எவ்வித அபராதமும் விதிக்கவில்லை என்றும், எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஆசிப் நஸ்ருல் தெரிவித்துள்ளார்.

அரசின் முடிவை தற்போது கிரிக்கெட் வாரியத்தின் மீது சுமத்தும் வகையில் அவர் பேசியுள்ளது அந்நாட்டு விளையாட்டு வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.