உத்தரப்பிரதேச மாநிலம் பலராம்பூர் பகுதியில், சலீமுன்னிஷா என்ற இளம்பெண் தனது வருங்கால கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோண்டா பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவருடன் சலீமுன்னிஷாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, சலீமுன்னிஷாவின் கிராமத்தைச் சேர்ந்த சகீனா என்ற பெண்ணுடன் இம்ரானுக்குக் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

தங்களின் காதலுக்கு இடையூறாக இருந்த சலீமுன்னிஷாவைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த அந்த கள்ளக்காதல் ஜோடி, அவரை ஒரு வீட்டிற்கு வரவழைத்து இரும்பு ராடால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

மயக்கமடைந்த பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தியதோடு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளனர்.

சலீமுன்னிஷா தற்கொலை செய்துகொண்டதாக இம்ரான் தரப்பு கூறியதை நம்பாத போலீஸார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், அவரது உடலில் பலமான காயங்கள் இருப்பதும், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.

இதையடுத்து போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில், இம்ரான் தனது கள்ளக்காதலி சகீனா மற்றும் அவரது தாய் ஜைனப் ஆகியோருடன் இணைந்து இந்தப் படுகொலையைச் செய்தது அம்பலமானது.

தங்களின் கள்ளக்காதலைத் தட்டிக்கேட்ட பாவத்திற்காக ஒரு இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இந்த மூன்று பேரையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.