
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கொடூரமாக நடந்த ஒரு குழந்தை கொலை சம்பவம், அப்பகுதியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியைச் சேர்ந்த தேசிங்கு ராஜா – லெமோரியா தம்பதியின் குழந்தை, வீட்டு அருகே ஆடிக் கொண்டிருந்தபோது, சஞ்சய் என்ற நபர் அந்த குழந்தையை தூக்கிச் சென்று, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், குழந்தையின் தலையை வெட்டி தனியாக வீசியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் மூழ்க, சஞ்சய் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று சரணடைந்தார். அவர் மீது ஏற்கனவே பல கொலை வழக்குகள் இருப்பதும், ஆனால் அவற்றில் மனநல பாதிப்பு என மருத்துவ சான்று பெற்று ஜாமீன் பெற உதவிய ஒரு வக்கீலின் உதவியாலேயே அவர் வெளிவந்திருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. அதே வக்கீலின் குழந்தையே இந்த கொலையின் பாதிப்பாக இருப்பது மக்கள் மனதை கலங்கடிக்கிறது.
சஞ்சயை வக்கீல் மனநல பாதிப்பாளர் என நீதிமன்றத்தில் சான்று தாக்கல் செய்து ஜாமீன் வாங்கி கொடுத்திருந்தார். ஆனால், “பைத்தியம்” என சமூகத்தில் பலர் தன்னை கேலி செய்வதாக சஞ்சய் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அந்த வக்கீலின் குழந்தையை பழிவாங்கும் நோக்கத்துடன் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம், மனநலக் கோளாறுடையவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கும் நடைமுறைகள் மீதான சிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது போலீசார் சஞ்சயை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.