சந்தேகப் பேயால் சீரழிந்த ஒரு குடும்பத்தின் கதை, இப்போது கொலையில் வந்து முடிந்துள்ளது. ஐதராபாத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்து வந்த சுதீர் ரெட்டி, தனது மனைவியின் கையாலேயே உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த சுதீர் ரெட்டிக்கும், அவரது மனைவி ஞான பிரசன்னாவுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே ‘நடத்தை’ குறித்த சந்தேகம் இருந்து வந்துள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த சுதீர் ரெட்டி, மனைவியின் நடத்தையைச் சந்தேகித்துப் படுக்கையறையில் வைத்துப் பயங்கரமாகச் சண்டையிட்டுள்ளார்.
பின்னர் போதையில் சுதீர் ரெட்டி அயர்ந்து தூங்க, ஆத்திரத்தில் இருந்த ஞான பிரசன்னா கயிறால் கணவரின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.
கொலையை மறைக்க, பிணத்தைக் கீழே தள்ளிவிட்டு, “அவர் போதையில் கட்டிலில் இருந்து விழுந்து இறந்துவிட்டார்” என உறவினர்களிடம் கூறி நாடகமாடியுள்ளார்.
ஆனால், சுதீர் ரெட்டியின் சகோதரிக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் சுதீர் ரெட்டி கழுத்தை இறுக்கிக் கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, ஞான பிரசன்னாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
