உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடும் மூடு பனி ஒரு உயிரைப் பறித்துள்ளது. குருகிராமில் பணியாற்றி வந்த 27 வயது சாஃப்ட்வேர் இன்ஜினியர் யுவராஜ் மேத்தா, வெள்ளிக்கிழமை இரவு அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
செக்டார் 150 அருகே வந்தபோது, கடும் மூடுபனியால் வழி தெரியாமல் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து, கட்டுமானப் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த ஆழமான அடித்தளக் குழியில் விழுந்தது.
அந்தக் குழியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் லப்பலப்பவென நிரம்பியிருந்தது. கார் மூழ்கத் தொடங்கியதும், யுவராஜ் காரின் மேற்கூரை மீது ஏறி நின்று “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..” என்று அபயக் குரல் எழுப்பியுள்ளார்.
அந்த வழியாக ஆர்டர் கொடுக்கச் சென்ற முனேந்திர குமார் என்ற டெலிவரி பாய், இதைப் பார்த்து உறைந்து போனார். அங்கிருந்தவர்கள் தண்ணீரின் குளிராலும், உள்ளே இருக்கும் இரும்புக் கம்பிகளாலும் பயந்து தயங்க, முனேந்திர குமார் துணிச்சலுடன் தனது இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அந்தப் பனிக் குளிரில் தண்ணீருக்குள் குதித்தார்.
சுமார் 30 நிமிடங்கள் போராடியும் காரின் கதவைத் திறக்க முடியாமல் போனது. சோகம் என்னவென்றால், யுவராஜின் தந்தை சம்பவ இடத்திற்கு வந்தபோது அவர் கண் முன்னாலேயே மகன் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.
