மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கல்யாண் பகுதியில் சப்தசுருங்கி என்ற அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. 4 மாடிகள் உள்ள இந்த கட்டிடம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அந்த  கட்டிடத்தில் வசித்து வரும் குடும்பங்களை உடனடியாக காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதனை சிலர் கண்டுகொள்ளவில்லை .

இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களாக கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று மதியம் திடீரென ஒரு வீட்டின் காங்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கீழ் வீட்டிலிருந்த நபர்கள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் சிறுமி உள்பட 6 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் 2 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உயிரிழந்த நபர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் நமஸ்வி (2), சுனிதா (38), சுஷிலா (78), பிரமிளா (56), வெங்கட் (42) மற்றும் சுஜாதா (38) ஆகிய 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.