
மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் பஹீம் ஷேக்(35) -பவுசியா ஷேக்(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 வயது பெண் குழந்தையான ஆயத் என்ற சிறுமியை தத்தெடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி தம்பதியினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். அதனை கேட்ட தம்பதியினர் செய்வதறியாமல் திகைத்தனர். அதன் பின் குழந்தையின் உடலை அடக்கம் செய்யும் முயற்சியில் பரபரப்பாக ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த குழந்தையின் இறப்பு குறித்து சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது குழந்தையின் உடலில் காயங்கள் உள்ளது என மருத்துவர்கள் பிரேத பரிசோதனையின் முடிவில் கூறினார்கள். அதன் பின் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் இறுதியில் பவுசியா ஷேக் குழந்தையை அடித்து துன்புறுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போலீசார் அவர்கள் சட்டபூர்வமாக குழந்தையை தடுத்தார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.