
பிரான்ஸின் தெற்குப்பகுதியில் உள்ள செயின்-செர்னின்-சூர்-ராஞ்ஸ் நகரில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. 69 வயதான உணவக உரிமையாளர் பிலிப் ஷ்னைடர், கடந்த 2023 பிப்ரவரியில் ஜார்ஜ் மெய்ச்லர் (60) என்ற தனிமையில் வாழ்ந்த நபரை கொன்று, அவரது உடலை துண்டித்து, சில பாகங்களை காய்கறி பானையில் சமைத்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜார்ஜின் மகள் தந்தை மயமானதை அடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசுக்கு புகார் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணையில் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த விசாரணையின் போது, ஷ்னைடர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
முதலில் சிறு தகராறில் கொலை செய்ததாகக் கூறியிருந்தாலும், பின்னர் கஞ்சா திருடும் நோக்கில் ஜார்ஜின் வீட்டிற்குச் சென்றதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் மூன்றாவது நபர் பென்ராகியாவுடன் இணைந்து, ஜார்ஜ்ஜின் உடலை துண்டித்து சமைத்ததையும், தலை மற்றும் உடற்பாகங்களை எரித்து சாம்பலாக்கியதாக கூறினார். மேலும் ஷ்னைடர் மற்றும் அவரது தோழி நதாலி கபுபஸ்ஸியும் (45), உயிரிழந்த ஜார்ஜின் காரில் சுற்றியதாலும், சந்தேகம் உறுதி செய்யப்பட்டது.
தற்போது, ஷ்னைடருக்கு கடத்தல், கொலை, சடலம் மறைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. நதாலி மற்றும் பென்ராகியாவுக்கு குற்றத்தில் பங்கு உள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மே 19ஆம் தேதி அவெய்ரான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு மே 22ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்தக் கொடூர சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.