”களம் நமதே” முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர்,கடந்த மே 8 ஆம் நாள் முதலமைச்சர் கோப்பை காண சின்னத்தையும் – அதற்கான பாடலையும் நான் வெளியிட்டேன். ஜூன் 30-ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த போட்டிகள் இன்று நிறைவு விழா காண்கிறது. உதயநிதி அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் விளையாட்டு துறையை ஒரு புத்துணர்ச்சியை பெற்று இருக்கின்றது.

நான் 2006 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றபோது பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டது இதே நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தான். எனவே இங்குள்ள விளையாட்டு வீரர்களை போல எனக்கும் – நேரு விளையாட்டு அரங்கம் சிறப்பான வாய்ப்பை கொடுத்தது. அப்போது நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தேன் அந்த துறையை நான் நிர்வகிப்பதை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று அப்போது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அதாவது ஏராளமான திட்டங்கள் – சிறப்பான செயல்பாடுகள் இதனை செயல்படுத்தப்பட்ட ஒருவரை பாராட்டக் கூடிய வகையில் இப்படி உயர்வாகச் சொன்னார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

அந்த வகையில் இப்போது எனக்கு உதயநிதியின் விளையாட்டுத்துறை செயல்பாட்டை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. நாள்தோறும் ஏராளமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எப்போது பார்த்தாலும் விளையாட்டு வீரர்களோடு அமைச்சர் உதயநிதி அவர்கள் இருக்கிறார்.  அமைச்சர் உதயநிதியால் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்று இருப்பதை நான் காண்கின்றேன். இவையெல்லாம் விளம்பரத்திற்காக செய்யப்படுபவை அல்ல. விளையாட்டு துறையின் செயல்கள் மூலமாக இத்தகைய பாராட்டுகள் கிடைக்கின்றது என தெரிவித்தார்.