அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விரும்புவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜெயலலிதா மீது பாசமும் நம்பிக்கையும் கொண்டது பாஜக. அதிமுக ஒன்றிணைந்தால் தமிழகத்தில் பாஜகவுக்கு பலம் கிடைக்கும் என்பதால் மோடி இதை விரும்புகிறார்” என கூறினார்.
தானும் செங்கோட்டையனும் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சியை ஒருங்கிணைக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டு மக்களும், அதிமுகவின் இரண்டு கோடி தொண்டர்களும் கட்சி ஒன்றிணைவதை கண்ணீருடன் எதிர்பார்ப்பதாக ஓபிஎஸ் குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவுடன் 25 ஆண்டுகள் பணியாற்றியதால், அவர் சொன்னதையே செய்து வருவதாகவும், வைகோ மீது மரியாதை இருப்பதால் அவர் பேச்சுக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
கட்சி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என உறுதியளித்த ஓ. பன்னீர்செல்வம், இது தொண்டர்களின் எதிர்பார்ப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.
