‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின், தனது முதல் படமான ‘என்ன சொல்ல போகிறாய்’ ஆடியோ வெளியீட்டு விழாவில், “கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன், 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன்” எனப் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இணையத்தில் எழுந்த கடும் விமர்சனங்களால் அவரது திரைப்பயணமே ஒரு நிமிடம் ஆடிப்போனது. இந்நிலையில், அந்தச் சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அஸ்வின் மிகுந்த வருத்தத்துடன் பேசியுள்ளார்.
“நான் யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கவில்லை, எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனாலும், மக்கள் என்னைப் பற்றி மிக மோசமாக விமர்சித்தார்கள்” எனத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அஸ்வின், “அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மனிதாபிமானமே இல்லை என்று எனக்குத் தோன்றியது. அது இன்றும் என்னை வாட்டிக்கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “என் மனதிற்குள் ஏற்பட்ட அந்தப் புண் கடைசி வரை என்னுடன் இருந்துகொண்டே தான் இருக்கும்; அது ஒருபோதும் போகாது” என அவர் உருக்கமாகக் கூறியுள்ளது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
எதார்த்தமாகப் பேசிய ஒரு விஷயம், இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஒரு நடிகரை இந்த அளவுக்குப் பாதித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
