சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ரவி மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், 1960-களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு ஒரு வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் 25-ஆவது படமான இது, ஆரம்பத்தில் ‘புறநானூறு’ என்ற பெயரில் சூர்யா நடிப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் சுதா கொங்கரா பேசுகையில், இந்தக் கதையை முதலில் சூர்யாவிடம் கூறியபோது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், ஆனால் அவரது கால்ஷீட் தேதிகள் கிடைக்காத காரணத்தால் அவரால் நடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிவகார்த்திகேயனிடம் இந்தக் கதையின் ஒரு சிறு பகுதியை மட்டும் கூறியபோது, அவர் முழு கதையையும் கேட்காமலேயே இதில் நடிக்கச் சம்மதித்ததாகக் கூறியுள்ளார். ஒரு மாணவர் புரட்சியைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவிற்குப் பதிலாகச் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
