சமூக வலைதளங்களில் உதவி கேட்பவர்களுக்குத் தயங்காமல் உதவும் குணம் கொண்டவர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். இதனைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட நபர் ஒருவர், தனது தாய் இறந்துவிட்டதாகவும், இறுதிச்சடங்கு செய்யப் பணம் இல்லை என்றும் கூறி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைக் கண்டு மனமுருகிய ஜி.வி. பிரகாஷ், உடனடியாக அந்த நபருக்கு ₹20,000 அனுப்பி உதவி செய்துள்ளார். ஆனால், அந்த நபர் பதிவிட்டிருந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த பழைய புகைப்படம் என்பதும், பணத்திற்காகத் தனது தாயே இறந்துவிட்டதாகப் பொய் சொல்லி அவர் ஏமாற்றியதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

​மனிதாபிமானத்துடன் செய்த உதவியை இப்படி மோசடியாகப் பயன்படுத்தியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பணத்தின் மீதான ஆசையினால், பெத்த தாயையே இறந்ததாகக் கூறி நாடகமாடிய அந்த நபரின் செயல் அருவருப்பானது எனப் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த மோசடி நபரைச் சும்மா விடக்கூடாது என்றும், காவல்துறையினர் உடனடியாக அவரைக் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் நெட்டிசன்கள் ஆவேசமாக வலியுறுத்தி வருகின்றனர்.