தாய்லாந்து இளவரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது வரை அவர் சுயநினைவிற்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் மன்னரின் மகளான இளவரசி பஜ்ரகித்தியபா, கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று பாங்காங் நகரத்தில் தன் நாய்களுக்கு பயிற்சி அளித்த சமயத்தில், திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு இதய நோய் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.

இந்நிலையில், இளவரசியின் உடல்நிலை பற்றி அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் இளவரசிக்கு மூன்று வாரங்கள் கடந்த நிலையில், சுயநினைவு திரும்பாமல் இருப்பதாகவும், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இதயம் போன்றவை இயங்குவதற்காக உபகரணங்களை பயன்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.