கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அதன் பின் நிகழ்ச்சி முடிந்ததும் கொச்சி விமான நிலையத்திற்கு இரவு 9:30 மணி அளவில் பிரியங்கா காந்தி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா காந்தியின் முன் பாதுகாப்பு வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன.

இந்நிலையில் மன்னூத்தி பைபாஸ் சாலையில் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டே சென்றதால் முன்  சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநர் எரிச்சலடைந்து திடீரென வாகன தொடரணிக்கு முன்னால் தனது காரை நிறுத்தியுள்ளார். இதனால் அங்கு நின்ற பாதுகாப்பு குழு அவரை தடுக்க முயன்ற போது கார் ஓட்டுநர் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.

வேண்டுமென்றே வாகன தொடர் அணிக்கு முன் வாகனத்தை நிறுத்தியது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயன்றது போன்ற குற்றங்களின் கீழ் ஓட்டுனர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரளாவைச் சேர்ந்த யூடியூபரான அனீஷ் ஆபிரஹாம் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர். தற்போது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.