தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கொசு உற்பத்தி அதிகரித்து, மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொசுக்களால் பரவும் நோய்களும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. துரதிஷ்டவசமாக மதுரை மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு இருவர் பலியாகியதால் நிலைமை மோசமாக மாறியுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த சத்தியபிரியா (41) தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் வசிக்கும் பகுதியில் சரியான சுகாதாரம் இல்லாதது ஒரு காரணியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திருமங்கலம் அருகே உள்ள ஜே. ஆலங்குளத்தைச் சேர்ந்த டிரைவர் கண்ணன் (38), திடீரென கடுமையான காய்ச்சலால் தனது 7 மாத மகள் அனன்யாவை இழந்தது அப்பகுதி மக்களிடையே டெங்கு உள்ளிட்ட மோசமான காய்ச்சல் குறித்து கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.