புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிலிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று காலை பள்ளியில் 6 மற்றும் 7- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் திவ்யதர்ஷினி, ஷோபனா, மகாலட்சுமி, ஆனந்தி, ரேணுகா, மற்றொரு திவ்யதர்ஷினி, மற்றொரு ரேணுகா, கீர்த்தனா, ஜனனி, செமி, தீபிகா, தமிழரசி, சோபியா, லாவண்யா, இனியா ஆகிய 15 மாணவிகள் ஆசிரியர்கள் திலகவதி, செபாசகேயுன் ஆகியோருடன் வேனில் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.

இந்நிலையில் போட்டியில் விளையாடிவிட்டு வேனில் அவர்கள் பிலிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் அனைவரும் சாமி கும்பிட்டனர். பின்னர் அங்கிருந்த காவிரி ஆற்றில் இறங்கி 15 மாணவிகளும் சந்தோஷமாக குளித்துக் கொண்டிருந்தபோது இனியா, தமிழரசி, லாவண்யா, சோபியா ஆகிய 4 பேரும் எதிர்பாராதவிதமாக ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவிகளை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் 4 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 4 மாணவிகளின் உடல்களையும் மீட்டனர். அவர்களது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் பொட்டுமணி அஜாக்கிரதையாக இருந்ததற்காகவும், விளையாட்டிற்கு அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்கள் செபாசகேயுன், திலகவதி ஆகியோர் கவனக்குறைவாக இருந்ததாகவும் குற்றம் சாட்டி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.