
சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அதாவது, தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 2 முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இதனிடையே ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை? என கூறினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக 106 புது அறிவிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் வெளியிட்டார். அதன்படி காசநோய் பரிசோதனைக்கான நுகர்வு பொருள்கள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் வழங்கி அனைத்து வட்டார அளவிலும் ஒருங்கிணைந்த காசநோய் சேவைகள் வழங்கப்படும். 7 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டண படுக்கைகள் அமைக்கப்படும்.
கொடைக்கானல் கந்தர்வகோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் உள்ள உடற்கூறாய்வு மையங்கள் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை திறன் ஆய்வகம் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். எழும்பூரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை பிரிவிற்கு தேவையான அதி நவீன உபகரணங்கள் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஆய்வகங்ளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் தர சான்றிதழ் பெற நவீன ஆய்வக உபகரணங்கள் மற்றும் ஆய்வக கட்டமைப்பு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு லேப்ரோஸ்கோபி, எலும்பு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் ரத்த சேமிப்பு அலகிற்கான உபகரணங்கள் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
தமிழகத்தில் ரூபெல்லா தட்டம்மை நீக்குதல் எனும் இலக்கை 50 விழுக்காடு மாவட்டங்களில் நிறைவேற்றப்படும். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தூய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்கு என தனி அறை அமைத்துதரப்படும். 100 இந்திய மருத்துவமுறை மருந்தங்கள் ரூ.12.98 கோடி செலவில் ஆயுஷ் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும்.