சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2023-ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை போட்டிகளுக்கான வீரன், சின்னம், கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டு மக்களே போல நானும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி ரசிகன் நான். அவரின் ஆட்டத்தை பார்ப்பதற்காகவே சேப்பாக்கம் மைதானத்திற்கு இரண்டு முறை சென்றேன்.

தமிழ்நாட்டு மக்களால் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை தான் தோனி. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடவேண்டும் என கோரிக்கை வைத்துக் கொள்கிறேன். தன்னுடைய கடுமையான உழைப்பின் காரணமாக தேசத்தின் மாடலாக தோனி விளங்குகிறார். அவரைப் போல தமிழ்நாட்டில் பல தோனிகள் உருவாக வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டு பிரிவுகளிலும் தோனிகள் உருவாக வேண்டும். மேலும் தமிழ்நாட்டை விளையாட்டில் முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கான திட்டத்தை தமிழக அரசு தீட்டி வருகிறது என்று கூறினார்.