மதுரை எம்.பி சு. வெங்கடேசன் வன பாதுகாப்பு திருத்த சட்டம் மசோதாவை தமிழில் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வன பாதுகாப்பு சட்டம் 1980-ஐ திருத்துவதற்கு forest (conservation) Amendment Bill 2023 என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா காட்டையும் காட்டு விலங்குகளையும் வணிக நலன் கருதி தனியாருக்கு திறந்து விடும் நோக்கத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பொதுமக்கள் இது குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் ராஜேந்திரா ஆக்ரவால் எம்பி அறிவித்தார்.

இது பற்றி பொதுமக்கள் மே 18-ஆம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பவர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு மதுரை எம்.பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வன திருத்த சட்டம் மசோதாவை தமிழில் நிறைவேற்ற வேண்டும் எனவும், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தமிழிலும் பேச அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.