சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை காண வந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, கார் ரேஸுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளை முன் நின்று கவனித்த இன்றைய துணை முதல்-அமைச்சர் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம் நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால், தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு 21 கேள்விகள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், கோயம்பேட்டில் நடக்க இருந்த பாஜக-வின் மாநாடு அதேபோல் வருடா வருடம் நடக்கும் ஆர்.எஸ் எஸ் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேர் வருவார்கள், எங்கே கார் நிறுத்தம், எங்கே பேருந்து நிறுத்தம் எங்கே உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், இருசக்கர ஆம்புலன்ஸ் வசதி, எத்தனை மருத்துவர்கள், எத்தனை செவிலியர்கள், எவ்வளவு உதவியாளர்கள் என்றெல்லாம் பல கேள்வி கேட்கும் தமிழக அரசு நம் இந்திய நாட்டின் விமானப்படை நடத்தும் நிகழ்ச்சிக்கு உரிய முன் ஏற்பாடுகளை செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு கார் ரேசுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளை முன் நின்று கவனித்த துணை முதல்-அமைச்சர் இதனைக் காக்க தவறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன் என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.