கடந்த எட்டு நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த சூழ்நிலையில் நேற்று அதிகாலை அதிரடியாக ஆசிரியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு,  மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியத்துக்கான அறிவிப்பு வரும்வரை போராட்டத்தை தொடர்வோம் என்று மண்டபத்திலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து டிபிஐ வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு,  ஆசிரியர் போராட்டம் நடத்தாத வகையில் பாதுகாப்பு  செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் அவர்கள் இரவு 10:30 மணியளவில் டிபிஐ வளாகம் முன்பாக குடி நாங்கள் போராட்டத்தை தொடர்வோம் என அறிவித்ததால்,  அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு,  போராட்டத்திற்கு வந்த ஆசிரியர்கள் பலரும் கைது செய்யப்பட்டு,  பேருந்துகள் மூலமாக வெவ்வேறு மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சூழலில் அழைத்து செல்லப்பட்ட ஏராளமான ஆசிரியர்கள் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதாகவும்,  தங்கள் போராட்டத்தை வலுவிழக்க செய்ய இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும்  தெரிவித்தனர்.

இன்று அவர்களுக்கு எண்ணம் எழுதும் திட்டத்தின் பயிற்சி வகுப்புகள்  நடைபெறுகிறது.  நாங்கள் பயிற்சியில் பங்கேற்க மாட்டோம். மேலும் வரக்கூடிய ஒன்பதாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் நாங்கள் பணிக்கு செல்ல மாட்டோம். போராட்டத்தை தொடர்வோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் தரப்பு தெரிவிக்கப்பட்டது.

இன்று எங்கும் அவர்கள் போராட்டத்தை மேற்கொள்ளவில்லை என்றாலும்  கூட தற்போது வரை சென்னையில் இருப்பதாக தகவல்கள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தான் போராட்டத்தில் முன்னெடுத்து வந்த பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு பள்ளிக்கல்வித்துறை அழைத்திருக்கிறது. தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஸ்ரீமதி. ககர்லா உஷா ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் பகல் 12 மணிக்கு  நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் கண்ணன், இந்த உண்ணாவிரதத்தின் முடிவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு கல்வித்துறை முதன்மைச் செயலாளர்கள் அவர்களும்,  எங்களது சம வேலை சம ஊதியம் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, எங்களது கோரிக்கையை மூன்று மாத காலத்திற்குள் நிறைவேற்றி,  20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்கள்.

இன்று நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுடைய இந்த கோரிக்கையை ஏற்கபட்டதனால் இன்று முதல் பள்ளிக்கு சென்று பணிபுரியும்  முடிவை எடுத்துள்ளோம். மூன்று மாத காலத்திற்குள் 20,000 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்ற அரசின் உத்தரவாதத்தால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இன்று முதல் நாங்கள் பணிக்கு திரும்புகின்றோம்.

எங்களது பணி இனி எப்போதும் போல் சிறப்பாக இருக்கும்.  எண்ணமெழுத்தும் திட்டத்தை சிறப்பாக கொண்டு சென்று அரசுக்கும்,   கல்வித்துறைக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுப்போம். எங்களது போராட்டத்தை வாபஸ் பெறுகின்றோம். எங்களது மாநில பொதுச்செயலாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் உள்ளார். ஆகையால் அவர் இங்கு வர முடியவில்லை. மற்ற மாநில பொறுப்பாளர்களும்,  மாவட்ட நிர்வாகிகளும் இந்த சந்திப்பிற்கு வந்துள்ளோம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் எங்களுக்கு கோரிக்கையை இரண்டு முறை  பரிசீலித்து, மூன்று மாத காலத்திற்குள் நிறைவேற்றுவோம் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகின்றோம். எங்களை யாரும் மிரட்டவும் இல்லை,  எங்களை அச்சுறுத்தவும் இல்லை.மாண்புமிகு முதன்மை செயலாளர் அவர்கள், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு முதலமைச்சர் வீட்டில் வைத்து,

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை  தொடர்பாக உண்ணாவிரத போராட்ட களத்தில் உள்ள  ஆசிரியர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு,  உடல் நலம் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு,  நாங்கள் உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுகிறோம் என்ற உத்தரவாதம் கொடுத்ததால் நாங்கள் இந்த போராட்டத்தில் இருந்து வாபஸ் வாங்குகிறோம்.

முதல்வர் சொன்னதின் பேரில், எங்களது முதன்மைச் செயலாளர்கள் எங்களுக்கு சொல்லியுள்ளார்கள். அதை நம்பி, அரசை நம்பி, முதல்வரை நம்பி நாங்கள் இந்த போராட்டத்தை முடித்துக் கொள்கின்றோம். தற்பொழுது மாண்புமிகு செயலாளர்  மூன்று மாத காலத்தில் உங்களது கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில் இந்த போராட்டத்தை முடித்துக் கொள்கின்றோம். நிறைவேற்றவில்லை என்றால் மாநில செயற்குழுவில் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.