தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த முரண்பாடுகள் தற்போது பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளன. கொள்கை ரீதியான பிணைப்பை விட, அதிகாரப் பகிர்வை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள இக்கூட்டணியின் செயல்பாடுகள் அரசியல் நோக்கர்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

பொதுவாக ஒரு வலுவான கூட்டணி என்பது ‘பொது செயல்திட்டத்தின்’ அடிப்படையில் அமைய வேண்டும். ஆனால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரணாகவும், தொடர்பின்றியும் தனித்தனியாக இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். காகித அறிக்கையிலேயே ஒன்றிணைய முடியாதவர்கள், நாளை ஆட்சியில் எப்படி மக்கள் நலனுக்காகக் கைகோப்பார்கள் என்ற ஐயம் எழுந்துள்ளது. மேலும், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிகளும், அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடமில்லை என்ற திமுகவின் பிடிவாதமும், இவர்களிடையே நிலவும் பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கூட்டணியின் அடையாளத்தைக் கூட ஒருமித்த கருத்துடன் இவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அகில இந்திய அளவில் ராகுல் காந்தி ‘இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணி என அடையாளப்படுத்த, தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினோ அதனை ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ என்றே அழைத்து வருகிறார். கூட்டணியின் பிரதானத் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றுவதை தவிர்த்து வருவது பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்தில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாகப் பேசிய ராகுல் காந்தி, பிற தலைவர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டியபோது, முதல்வர் ஸ்டாலினை முற்றிலும் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேடை மொழிபெயர்ப்பின் போது ‘சகோதரர்’ என்ற விளிப்புச் சொல் தவிர்க்கப்பட்டதும், இவர்களுக்கிடையே நிலவும் உறவு விரிசலைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

ஒருபுறம் காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை விமர்சிக்க, மறுபுறம் ‘வாக்குச்சாவடிகளில் பணியாற்றக் கூட ஆள் இல்லாத கட்சி’ என காங்கிரஸை திமுகவினர் எள்ளி நகையாடுகின்றனர். உச்சகட்டமாக, முதல்வர் முன்னிலையிலேயே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டியது, ‘திராவிட மாடல்’ அரசின் தோல்வியை அக்கூட்டணிக்குள்ளேயே உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும் இந்தக் குழப்பங்களுக்கு நேர்மாறாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தமிழகத்தில் மிகவும் உறுதியுடன் காட்சியளிக்கிறது. எடப்பாடி கே. பழனிசாமி, அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன் மற்றும் ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர்.