இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது ஓய்வு நேரத்தை சமூக வலைதளங்களிலேயே செலவிடுகின்றனர். அவ்வாறு சமூக வலைதளப் பக்கங்களுக்குச் செல்லும்போதெல்லாம் ஏதேனும் ஒரு வினோதமான அல்லது ஆச்சரியமூட்டும் காட்சிகள் நம் கண்ணில் படுவதுண்டு. அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், சில இளைஞர்கள் சேர்ந்து இரண்டு சிறிய நாய் குட்டிகளுக்கு மிக வினோதமான முறையில் திருமணம் செய்து வைக்கின்றனர். மனிதர்களுக்கு நடக்கும் திருமணச் சடங்குகளைப் போலவே, அந்த நாய் குட்டிகளுக்கும் முதலில் ‘மாலை மாற்றுதல்’ சடங்கு நடத்தப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, ஒரு நாய் குட்டியின் தலையில் மற்றொரு குட்டியைக் கொண்டு ‘சிந்தூரம்’ இடச் செய்கின்றனர். அத்துடன் நிற்காமல், அக்னி சாட்சியாக நாய்களை ‘வலம் வர’  செய்கின்றனர். இறுதியாக, மற்றொரு பெரிய நாயைக் கொண்டு அந்த மணமக்களுக்கு ‘ஆசிர்வாதம்’ வழங்கச் செய்கின்றனர். ஓய்வு நேரத்தில் இளைஞர்கள் செய்த இந்த குறும்புத்தனமான வீடியோ தற்போது பேசுபொருளாகியுள்ளது.

எக்ஸ் (X) தளத்தில் @SakthivelBca என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை, இதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஆண்கள் எப்போதுமே மாறமாட்டார்கள், அவர்கள் எப்போதும் சிறுபிள்ளைத்தனமானவர்கள் தான்” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொரு பயனர் கிண்டலாக, “இது குழந்தை திருமணம், இது சட்டப்படி குற்றம்” என்று பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர், அந்த நாய் குட்டிகள் பார்ப்பதற்கு மிகவும் சோகமாக இருக்கின்றன என்றும், வேறு சிலர் “பார்க்க வேடிக்கையாக இருக்கிறது” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் எது எப்படியோ, கற்பனைக்கு எட்டாத இந்த வினோதத் திருமண வீடியோ இணையவாசிகளிடையே பலத்த சிரிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.