விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி சார்பில் விவசாயத்துறையில் பயன்படுத்தும் ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் விவசாய நிலங்களில் இருக்கும் பயிர்களில் குறைந்த நேரத்தில் 25 முதல் 30 ஏக்கர் வரை ட்ரோன் மூலம் மருந்துகளை தெளிக்க இயலும். இதன் மூலம் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். இதன் முக்கிய நோக்கம் பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கும் காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகும்.

இந்நிலையில் 18 முதல் 45 வயது வரை உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களும், பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல் தகுதி சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்து பயிற்சி பெறலாம். இதனையடுத்து சுமார் 10 நாட்கள் அளிக்கப்படும் பயிற்சிக்காக தாட்கோ மூலம் 61,100 ரூபாய் வழங்கப்படும்.

இதனை தொடர்ந்து பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமம் வழங்கப்படும். இது 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். இந்த பயிற்சியில் சேர விருப்பம் இருப்பவர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இளையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.