நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தையும் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பெரியவகை மின்மோட்டார் எந்திரங்கள் பள்ளிக்கு அருகாமையில் வைத்து நெல் தூற்றப்படுகிறது. இப்படி நெல் தூற்றும்போது நெல் தூசிகள் மற்றும் துகள்கள் பறந்து பள்ளியை சுற்றி உள்ள பகுதிகளில் காற்றுடன் கலப்பது மட்டுமல்லாமல் கட்டிடங்கள் மற்றும் செடிகளில் படிந்துள்ளது.

இதன் காரணமாக பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு இருமல் உள்ளிட்ட பல்வேறு சுவாசக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் சிலர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி அதனை சுற்றி  தடுப்புகள் அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.