துக்ளக் விழாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவின் சாதனைகள் குறித்து பேசி உள்ளார்.

சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மியூசிக் அகாடமியில் நேற்று முன் தினம் துக்ளக் இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த விழாவில் அமைச்சர் சோ எழுதிய நினைத்துப் பார்க்கின்றேன் என்ற நூலின் தொகுப்பை வெளியிட்டார்.

இதன்பின் அவர் பேசியதாவது, மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய மக்களே அதிக அளவு வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார்கள். அப்படி வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு முனைப்பாக இருக்கின்றது. உதாரணமாக உக்கிரன் மீதான ரஷ்ய போரில் அங்கு வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா 5-வது மிகப் பெரிய நாடாக இருக்கின்றது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது இடத்திற்கு நிச்சயம் முன்னேறும். சென்ற எட்டு வருடங்களில் தேசிய அளவில் மத்திய பாஜக அரசு பல முக்கிய முடிவுகளை துணிச்சலாக எடுத்து இருக்கின்றது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு எந்த சமரசத்திற்கும் சென்றது கிடையாது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.

இன்று உலகத்திலேயே மிகவும் பொறுப்பான நாடாக இந்தியா திகழ்கின்றது. இந்திய பெருங்கடல் எல்லையில் வலிமையான மற்றும் மிக முக்கியமான நாடாக இந்தியா திகழ்கின்றது. மத்திய அரசின் பெண்களை வளர்ப்போம் பாதுகாப்போம் போன்ற நலத்திட்டங்கள் உலக அளவில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் இந்தியா பேரிடர் காலங்களில் உலக நாடுகளின் உதவியை நாடி இருந்தது.

ஆனால் தற்போது கொரோனா காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்கும் மிகப்பெரிய வல்லமைக்கு முன்னேறி உள்ளது. 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பு ஊசியை வழங்கி உலக நாடுகளையே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றது. வளரும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்தை தற்போது பெற்றுள்ளது. மற்ற நாடுகளுடான உறவில் இந்தியா சிறந்து விளங்குகின்றது. இதனால் உலக நாடுகளுக்கு மிகவும் முக்கிய தேவையான நாடாக இந்தியா மாறியுள்ளது என பேசி இருக்கின்றார்.