கோயம்புத்தூரில் இருந்து பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவிலுக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி பாரத் கௌரவ் என்ற சுற்றுலா ரயில் திட்டத்தின் கீழ் மே 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சீரடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயிலில் சுமார் 250 பயணிகள் செல்கிறார்கள். ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு உயர்தர சைவ உணவு மற்றும் பக்தி இசை ஒலிபரப்பு ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலம் என்பதால் ரயில் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதோடு பயணிகளின் உடல் நலம் குறித்த பாதுகாப்புக்காக மருத்துவர்களும் உடன் செல்வர். 2 நாட்கள்  தங்கும் பயணிகளுக்கு சீரடியில் தரிசனம் செய்வதற்கு சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படும். சுமார் 2600 கிலோமீட்டர் தூரம் வரை செல்வதால் ஏசி வசதி உட்பட பயணிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் ரயிலில் இருக்கும். மேலும் இந்த தகவலை கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது சவுத் ஸ்டார் ரயில் ஒருங்கிணைப்பாளர் திரு. முரளி தெரிவித்துள்ளார்.