சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட இருப்பதாகவும் ஜூன் மாதத்தில் பேருந்து நிலையம் திறக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் ஒன்று கட்டப்படும் என்று அறிவித்தார். அதன்படி தேவையான பணியாளர்களுடன் சுமார் 7 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டப்பட இருக்கிறது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வார்கள். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக புதிதாக காவல் நிலையம் கட்டப்பட இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.