
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது மாநில அளவிலோ அல்லது தனிப்பட்ட பகுதிக்கானதோ அல்ல. இது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்படும் ஒரு தேசிய நடவடிக்கையாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தை நோக்கி, “இந்த பயிற்சிக்கும், தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. இதை ஏன் தேர்தல் நடவடிக்கையோடு இணைத்திருக்க வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், “வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை என்பது தேர்தலுக்குத் தாறுமாறானது அல்ல. இது தேர்தலுக்கு முந்தைய நிர்வாக செயலாகும்” என பதிலளித்தது.
மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் இந்தியர் என்பதற்கான சான்றாக பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தாங்கள் ஆய்வு செய்யும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இது முறையாகவும், நியாயமான செயல்முறையாகவும் நாடு முழுவதும் ஒரே மாதிரி நடைமுறையில் கொண்டுவரப்படும் என்றும் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக எழுந்துவரும் எதிர்ப்புகள் மற்றும் வழக்குகள் மத்தியில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.