பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் கௌஷிக் முகர்ஜி, தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு சமீபத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அந்த பதிவில், தனது நிறுவன அலுவலை அடுத்த 6 மாதங்களில் புனேவுக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளார். “இந்த மொழி குழப்பம் தொடர்ந்தால், கன்னடம் பேசத் தெரியாத எனது ஊழியர்கள் அடுத்த இலக்காக மாறக்கூடும் என்ற பயம் எனக்கு உள்ளது. எனவே, அவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த முடிவை எடுத்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பரபரப்பான முடிவுக்கு கரணம், சமீபத்தில் பெங்களூரு சந்தாபுரா எஸ்.பி.ஐ வங்கியில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு வெளியாகியுள்ளது. அந்த வங்கியில் பணியாற்றும் ஒரு மேலாளர், வாடிக்கையாளர் கன்னடத்தில் பேச கேட்டபோது, “இது இந்தியா; நான் இந்தி பேசுவேன், கன்னடம் பேசமாட்டேன்” என பதிலளித்த வீடியோ வைரலானது.

இதனைத் தொடர்ந்து, கன்னட அமைப்புகள், அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பெங்களூரு தெற்கு எம்.பி தேஜஸ்வி சூர்யா, “கர்நாடகத்தில் உள்ள ஊழியர்கள், உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்” எனக் கூறினார். முதல்வர் சித்தராமையா அந்த மேலாளரின் நடத்தையை  குறை கூறி, முழுமையான மொழி மற்றும் கலாசார பயிற்சி வங்கி ஊழியர்களுக்கு தேவை என வலியுறுத்தினார்.

இந்தச் சூழலில் தான் கௌஷிக் முகர்ஜி தனது நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பையும், மனநிலையும் கருத்தில் கொண்டு, பெங்களூருவிலிருந்து புனேவுக்கு நிறுவனம் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறியுள்ளார். “எங்கள் ஊழியர்கள் வேலை செய்யும் இடத்தில் தங்களை பாதுகாப்பாக உணர வேண்டும்.

மொழி அடிப்படையில் எவரும் துன்புறுத்தப்படக்கூடாது” என்றார். இது தொழில்நுட்ப உலகில் விவாதங்களை தூண்டியுள்ளது. இதேபோல் சில மற்ற நிறுவனங்களும் மாநிலத்தை விட்டு மாற்றம் குறித்து ஆலோசித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.