அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை வரவேற்றுப் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது திருமண வாழ்க்கை குறித்துப் பகிர்ந்த நகைச்சுவை தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா முன்னிலையில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது தனது பெற்றோரான ஃபிரெட் மற்றும் மேரி ஆன் டிரம்ப் ஆகியோரின் 63 ஆண்டுகால நீண்ட திருமண வாழ்க்கையைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்.
திடீரெனப் பின்வரிசையில் அமர்ந்திருந்த தனது மனைவி மெலனியாவை நோக்கித் திரும்பிய டிரம்ப், “மன்னிக்கவும் டார்லிங், அந்த 63 ஆண்டுகால சாதனையை நம்மால் முறியடிக்க முடியாது என நினைக்கிறேன். எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது, ஆனால் அது நமக்கும் செட் ஆகாது. நாம் நன்றாகவே வாழ்வோம், ஆனால் அந்த அளவிற்குச் சிறப்பாக (நீண்ட காலம்) இருக்காது என்று நகைச்சுவையாகக் கூறினார். 79 வயதான டிரம்ப், தன்னை விட 23 வயது இளையவரான 56 வயது மெலனியாவைக் குறிப்பிட்டுச் சொன்ன இந்த ஜோக்கை கேட்டு, மன்னர் சார்லஸும் மெலனியாவும் ஒருவித தர்மசங்கடமான சிரிப்பை வெளிப்படுத்தினர்.
SEE IT: Trump just cracked an awkward, cringey joke about his marriage, and Melania’s facial expressions are telling.
Can you imagine being so incapable of normal human warmth that you turn a ceremony with a King into a stand-up set about your failing marriage? pic.twitter.com/Hd3eCZz4aq
— CALL TO ACTIVISM (@CalltoActivism) April 28, 2026
சில நாட்களுக்கு முன்பு பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல், டிரம்ப் – மெலனியா தம்பதியின் வயது வித்தியாசத்தைக் கிண்டல் செய்து ஒரு ஜோக் அடித்திருந்தார். “மெலனியா ஒரு எதிர்பார்ப்பில் இருக்கும் விதவையைப் போல (Expectant widow) ஜொலிக்கிறார்” என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையானது.
கிம்மலின் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மெலனியா டிரம்ப், “இது நகைச்சுவை அல்ல வெறுப்பைத் தூண்டும் செயல். அமெரிக்க அரசியலில் உள்ள நோய்க்கூறுகளை இது அதிகப்படுத்துகிறது. கிம்மலைப் போன்றவர்கள் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து இது போன்ற வன்மத்தைப் பரப்புவதை அனுமதிக்கக் கூடாது என்று ஆவேசமாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதிபர் டிரம்பும், “கிம்மல் ஒருபோதும் நகைச்சுவையான மனிதர் கிடையாது” என்று சாடியுள்ளார். இந்தச் சூழலில், டிரம்ப் தனது திருமணத்தைப் பற்றித் தானே கிண்டல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
