உலகப் புகழ்பெற்ற அமேசான் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த நிறுவனத்தின் AWS சிஇஓ மேட் கார்மன் ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
2025 இறுதியில் 14,000 பேர், 2026 ஜனவரியில் 16,000 பேர் என மொத்தம் 30,000 ஊழியர்களை அமேசான் வேலையை விட்டு நீக்கியுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இது வெறும் ஆட்குறைப்பு மட்டுமல்ல, ஒரு பெரிய ‘மறுசீரமைப்பு’ (Restructuring) என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு பக்கம் 30,000 பேரை வீட்டுக்கு அனுப்பினாலும், மறுபக்கம் 2026-ம் ஆண்டுக்குள் புதிதாக 11,000 மென்பொருள் பொறியாளர்களை வேலைக்கு எடுக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.
“AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மென்பொருள் துறையை அழித்துவிடும் என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. AI என்பது வேலைகளைப் பறிக்காது, மாறாக வேலை செய்யும் வேகத்தை அதிகரிக்கும். முன்பு இரண்டு ஆண்டுகள் எடுக்க வேண்டிய வேலையை இப்போது இரண்டே மாதங்களில் முடிக்க AI உதவுகிறது” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எளிமையாகச் சொன்னால், பழைய முறையிலான வேலைகளைக் குறைத்துவிட்டு, AI நுட்பம் தெரிந்த புதிய திறமையாளர்களை அமேசான் வளைத்துப் போடத் தொடங்கியுள்ளது.
