தென்கொரியாவின் தலைநகரான சியோல் அந்நாட்டின் பணக்கார நகராகவும் மற்றும் அதிநவீன நகராகவும் அமைந்துள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன், இந்நாட்டில் வெளிநாட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் நகரை அழகுப்படுத்துவதில் கவனம் செலுத்தபட்டது. அப்போதைய ராணுவ தலைவர்கள் சியோலில் இருந்த குடிசை பகுதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்து, தீவிரமாக செயல்பட்டனர். ஆனால் சியோலின் தெற்கு பகுதியில் இருக்கும் குர்யோங் கிராமத்திலுள்ள குடிசை பகுதிகளை மட்டும் அவர்களால் ஒழிக்க முடியவில்லை.
இதுவே தற்போது சியோலில் இருக்கும் ஒரே ஒரு குடிசை பகுதியாகும். மேலும் இங்கு 600-க்கும் மேற்பட்ட குடிசைகள் இருந்தாலும், அதில் 100-க்கும் அதிகமான குடிசைகள் காலியாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை குடிசை பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அடுத்தடுத்த குடிசைகளுக்கும் பரவியதால், வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிசைகளில் இருந்த நூற்றுக்கணக்கான மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர்.
இதனையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் இந்த பயங்கர தீ விபத்தில் 60 வீடுகள் எரிந்து சாம்பலாகின. எனினும் 100-க்கும் அதிகமான குடிசைகள் வீடுகள் காலியாக இருந்ததால் உயிரிழப்புகள் போன்ற எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் எதுவும் சரியாக தெரியாததால் இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.