கர்நாடக பெங்களூருவில் 14-வது ஏரோ இந்தியா-2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 80-க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரு வந்த பிரதமர் கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி உள்ளார்.

முன்னதாக ஆளுநர் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, கேஜிஎஃப் பட நடிகர் யாஷ், காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி, ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத் தலைவரும், முன்னணி தயாரிப்பாளருமான விஜய் கிர்கந்தூர், மறைந்த புனித் ராஜ்குமாரின் மனைவி அஷ்வினி மற்றும் யூடியூப்பர் ஆர்.ஜெ.ஷரத்தா போன்றோரை மோடி சந்தித்தார். அப்போது கர்நாடகாவை திரைப்பட நகரமாக மாற்ற வேண்டும் எனவும் வெளிநாட்டில் உள்ளது போன்று இங்கும் பல வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் மோடியிடம் யாஷ் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்களும் பிரதமர் மோடியை சந்தித்தனர். கிரிக்கெட் வீரர்களான அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால் போன்றோரும் மோடியை சந்தித்தனர். கர்நாடகாவில் வருகிற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்தித்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.