கர்நாடக உணவகம் ஒன்றில் பணியாளர் ஒருவர் வெறும் கையால் ராகி முத்தையை உருட்டி வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வீடியோ, சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு பெரிய பாத்திரத்தில் இருக்கும் ராகி மாவை அந்தப் பணியாளர் சாதாரணமாகக் கையால் எடுத்து உருண்டைகளாகப் பிடித்து வாடிக்கையாளர்களின் தட்டுகளில் வைக்கிறார். இதைப் பார்த்த பலரும், “உணவகங்களில் இது போன்ற செயல்கள் சுகாதாரமற்றவை” எனச் சாடி வருகின்றனர்.

 “ராகி முத்தை பாரம்பரிய உணவாக இருக்கலாம், ஆனால் உணவகங்களில் கிளவுஸ் அல்லது கரண்டி பயன்படுத்தாமல் வெறும் கையால் தொடுவது ஏற்புடையதல்ல” என்று பலர் வாதிடுகின்றனர்.

“நான் ஒரு கன்னடிகர்தான், இருந்தாலும் கடைகளில் கேக் முதல் ராகி முத்தை வரை கைகளால் கையாளுவது அருவருப்பாக உள்ளது” என்று ஒரு பெண்மணி பதிவிட்டுள்ளார்.

“தலைமுறை தலைமுறையாக விவசாயிகள் முதல் உழைக்கும் வர்க்கம் வரை ராகி முத்தையை இப்படித்தான் உண்டு வருகின்றனர். சூடாக இருக்கும் ராகி முத்தையில் கிளவுஸ் பயன்படுத்தினால் அது உருகி பிளாஸ்டிக் துகள்கள் உணவில் கலக்க வாய்ப்புள்ளது” என்று சிலர் இதற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், பீட்சா மாவைக் கையால் பிசைவதைச் சுட்டிக்காட்டி இது கலாச்சார எதிர்ப்பு என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.