பல்வேறு நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், “தற்போது உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டு சிறைகளில் மொத்தமாக 10,574 இந்தியர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்” எனத் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 2,773 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் 2,379 பேர், நேபாளத்தில் 1,357 பேர், கத்தாரில் 795 பேர், மலேசியாவில் 380 பேர், குவைத்தில் 342 பேர் மற்றும் இங்கிலாந்தில் 323 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். சீனாவில் மட்டும் 183 இந்தியர்கள் உள்ளனர். பாகிஸ்தானிலும் 246 பேர் சிறையில் இருக்கின்றனர். மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் தலா ஒருவர் வீதம் சிறையில் உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் முக்கியமாக, இந்த 10,574 இந்தியர்களில் 43 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 21 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கி வருகிறார்கள். சவுதி அரேபியாவில் 7 பேர், சீனாவில் 4, இந்தோனேசியாவில் 3, குவைத்தில் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா, மலேசியா, ஓமன், பாகிஸ்தான், கத்தார் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒரு இந்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு, இந்த தண்டனை பெற்றவர்கள் மற்றும் சிறையில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் சட்ட உதவி, தூதரக அணுகல், இருதரப்பு பேச்சுவார்த்தைகள், பொது மன்னிப்பு முயற்சி, வழக்கறிஞர் நியமனம், நாடு திரும்பும் வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. இலங்கையில் சிறையில் உள்ள 28 இந்திய மீனவர்களில் 27 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும், ஒருவர் புதுச்சேரியைச் சேர்ந்தவரும் ஆகும். இவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
