இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் விதிகளில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுவரை ஏடிஎம் கார்டு இல்லாமலேயே செல்போனில் உள்ள க்யூஆர் கோடு வசதியைப் பயன்படுத்தி யூபிஐ மூலம் பணம் எடுக்கும் முறை தனியாகக் கணக்கிடப்பட்டு வந்தது.
ஆனால் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கார்டு மூலம் பணம் எடுப்பதும் யூபிஐ மூலம் பணம் எடுப்பதும் ஒன்றாகவே கருதப்படும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பிற்குள் இனி இந்த யூபிஐ பணப்பரிமாற்றங்களும் அடங்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறைப்படி எச்டிஎப்சி வங்கி ஏடிஎம்களில் மாதம் ஐந்து முறையும் மற்ற வங்கி ஏடிஎம்களில் இடத்தைப் பொறுத்து மூன்று முதல் ஐந்து முறையும் இலவசமாகப் பணம் எடுக்க முடியும். இனிமேல் நீங்கள் கார்டு அல்லது யூபிஐ என எந்த முறையில் பணம் எடுத்தாலும் இந்த இலவச வரம்பைத் தாண்டினால் ஒவ்வொரு முறைக்கும் வழக்கமான ஏடிஎம் கட்டணம் வசூலிக்கப்படும்.
வங்கியின் கட்டண அமைப்புகளை முறைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி தங்களது மாதப்பரிவர்த்தனைகளைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
