கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அருகே உள்ள மன்னார் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற வியாபாரி கடன் தொல்லை காரணமாகத் தனது இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று மாலை தனது மகள்களைப் பள்ளியிலிருந்து காரில் அழைத்து வந்த மனோஜ், வழியில் காரை நிறுத்திவிட்டு அவர்களுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரும் விஷத்தைக் குடித்த நிலையில், குளிர்பானம் கசப்பாக இருப்பதாகக் கூறி இளைய மகள் சிவகங்கா அதனைத் துப்பியுள்ளார்.
சிறிது நேரத்தில் தந்தை மனோஜும் மூத்த மகள் சிவநந்தனாவும் காரிலேயே மயங்கி விழுந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவகங்கா காரிலிருந்து கீழே இறங்கி அவ்வழியாக வந்தவர்களிடம் தகவலைக் கூறிவிட்டுத் தானும் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் மற்றும் அவரது மூத்த மகள் சிவநந்தனா ஆகிய இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இளைய மகள் சிவகங்காவிற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மன்னார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடன் பிரச்சினை காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
