நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அர்ஜுனன்(78), ருக்மணி(71) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் பாலசுந்தர் காவல் கிணறு இஸ்ரோவில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அர்ஜுனன் கடந்த மாதம் இறந்து விட்டார். இந்நிலையில் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

அவருக்கு பாலசுந்தர் தினமும் சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பாலசுந்தர் சாப்பாடு கொடுப்பதற்காக வந்த போது வீட்டின் முன் கதவு பூட்டி இருந்தது. இதனால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது பின் கதவு திறந்து கிடந்ததோடு ருக்மணி தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

அவர் கழுத்தில் கிடைந்த 7 பவுன் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 7 பவுன் வளையல்கள் என 14 பவுன் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாலசுந்தர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது.

அதோடு வீட்டில் இருந்த பீரோவின் கதவும் திறந்து கிடந்தது. ஆனால் அதில் லாக்கர் இருந்ததால் அதில் எதுவும் திருட்டு போகவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைக்கப்பட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.